மீண்டும் யாழ்.மாநகரசபையின் முதல்வராக இமானுவேல் ஆனல்ட் ; வெளியானது வர்த்தமானி
மீண்டும் யாழ்.மாநகரசபையின் புதிய முதல்வராக இமானுவேல் ஆனல்ட் நியமிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் புதிய முதல்வர் தொிவு கடந்த 19ம் திகதி இடம்பெற்றது.
இதன்போது 24 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் கூடியிருந்த நிலையில் கூட்டத்துக்குத் தேவையான கோரம் போதாமையால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு நியாயமற்றது என கூட்டத்தில் கலந்து கொண்ட 20 உறுப்பினர்கள் தமது எழுத்து மூல ஆட்சேபனையை உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பியிருந்தனர்.
இது தொடர்பில் ஆளுநர் தலைமையில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர்களில் ஒருவரும் கூடி ஆராய்ந்து யாழ்.மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலக வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது.
இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66(எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமையன்று நடாத்தப்பட்ட தெரிவின் மூலம், முன்மொழியப்பட்ட படி இ.ஆர்னோல்ட் யாழ் மாநகர சபையின் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கான விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
