ரயில் சேவையில் ஏற்படவுள்ள மாற்றம்!
ரயில் சேவைகள் இறுதி இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, ரயில் சேவைகளின் நேர அட்டவணையை நாளை முதல் முழுமையாக திருத்துவதற்கு ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.
ரயில் பாதைகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக வேகத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கமான அட்டவணையின் பிரகாரம் ரயில் சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அலுவலக ரயில்கள், கொழும்பு கோட்டை மற்றும் ஏனைய இடங்களை சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் அலுவலக ஊழியர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு, ரயில்களின் நேர அட்டவணையை முழுமையாக திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கரையோர பகுதியில் உள்ள தண்டவாளங்கள் பழுதடைந்துள்ளதால் கடலோரப் பகுதியில் இயக்கப்படும் ரயில்களுக்கு வேகத்தடை விதிக்க அதிகாரிகள் நிர்பந்திக்கப்பட்டு, கரையோர ரயில்களின் நேர அட்டவணை முன்னர் திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.