நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2025ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் 5.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார துறை செயல்திறன்
இந்த வலுவான வளர்ச்சிக்கு நாட்டின் முக்கிய பொருளாதார துறைகளின் செயல்திறன் பங்களித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த காலப்பகுதியில், விவசாய நடவடிக்கைகள் 3.6 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. மேலும் கைத்தொழில் நடவடிக்கைகள் 8.1 சதவீதம் என்ற குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளன.
அத்துடன், சேவைத்துறை 3.5 சதவீத வளர்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டில் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 4.9 சதவீதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.