இலங்கையின் பல்கலைக்கழக கல்வி முறைமையில் மாற்றம்!
இலங்கையின் பல்கலைக்கழக கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது வர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் திறக்கப்படும் சர்வதேச பல்கலைகழகங்கள்
சர்வதேச தரத்திற்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களை தரமுயர்த்த வேண்டும் என்பதுடன், 2030ஆம் ஆண்டளவில் பிராந்தியத்தில் சிறந்த பல்கலைக்கழகங்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, சர்வதேச பல்கலைக்கழகங்கள் சிலவற்றை இலங்கையில் திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக இரண்டு அல்லது மூன்று பல்கலைக்கழகங்களை திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.
பிராந்தியத்தில் சிறந்த உயர்கல்வியை வழங்கும் மையமாக இலங்கையை மாற்ற வேண்டும் என தெரிவித்த உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் , இதன்மூலம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்களை இலங்கைக்கு ஈர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.