பாகிஸ்தானை போல் இலங்கையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு 113க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணைக்காக தற்போது கைச்சாத்திடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இம்மாதம் 8ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி இந்த இரண்டு தீர்மானங்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்தது.
இந்த நிலையில் அதன் முன்மொழிவுகள் அடுத்த கூட்டத் தொடரின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
அந்தவகையில் காலி முகத்திடலில் கூடாரமிட்டும் இன்றும் மூன்றாவது நாளாக அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
 இவ்வாறான நிலையில் அண்மையில் பாகிஸ்தானில் இம்ரான் ஆட்சி கவிழ்ந்ததைப்போல  இலங்கையிலும் ஆட்சிமாற்றம் ஏற்படுமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.