மின்வெட்டு நேரத்தில் மாற்றம்!
அடுத்த வாரம் முதல் மின்வெட்டு நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
செயலிழந்த நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரத்தை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தேசிய அமைப்புடன் இணைக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் திங்கட்கிழமைக்குள் நிறைவடையும் என அதன் ஊடகப் பேச்சாளர் எண்ட்ரூ நவமணி தெரிவித்தார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையம்
கடந்த 15ஆம் திகதி நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் திடீரென பழுதடைந்ததையடுத்து, நாளாந்த மின்வெட்டை 03 மணிநேரமாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனினும், பராமரிப்புப் பணிகளுக்குப் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மின் உற்பத்தி இயந்திரம் தேசிய அமைப்பில் இணைக்கப்படுவதன் மூலம், தேசிய மின் கட்டமைப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அதேவேளை தற்போது, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரமும் பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.