சாமர சம்பத் தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் கைது
முன்னாள் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் லியனாரச்சிகே சுமதிபால லியனாரச்சி என்பவர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
81 இலட்சம் ரூபாய் கையூட்டலாக கோரி பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொஸ்பரைட், இரசாயன நிறுவனத்தினால் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தெரிவு செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பரைட் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொடுத்தமைக்கும், அதற்குத் தேவையான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள உதவியமைக்கும் பதிலாக, அந்த நிறுவனங்களிடம் இருந்து கையூட்டல் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவளித்து உதவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில், கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால், லியனாரச்சிகே சுமதிபால கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.