மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பதவியேற்பு; ஜனாதிபதி ரணில் முன் உள்ள சவால்கள் !
மக்களின் கடும் எதிப்புக்கு மத்தியில் இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். நாட்டின் நெருக்கடி நிலை ஒரு புறமும் மக்களின் எதிர்ப்பு மறுபுறமும் உள்ள நிலையில், புதிய ஜனாதிபதியின் முன் உள்ள சவால்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசங்கத்திற்கு எதிராக மக்கள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்தனர். கடந்த 9-ம் தேதி பொதுமக்கள் அதிபர் இல்லத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து, ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில் நாட்டைவிட்டு தப்பியோடிய கோட்டாபய, தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
ரகசிய வாக்கெடுப்பு
இதனையடுத்து மக்களின் விருப்பத்தையும் மீறி இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நாட்டின் புதிய அதிபரைத் தேர்வு செய்ய நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், வாக்கெடுப்பில் வெற்றி பெற 113 வாக்குகளைப் பெற வேண்டும்.
நேற்று காலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் 223 எம்.பி.க்கள் வாக்களித்தனர். 2 எம்.பி.க்கள் வாக்களிக்காத நிலையில், 4 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. மீதமுள்ள 219 வாக்குகளில், 134 வாக்குகளைப் பெற்று, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.
புதிய ஜனாதிபதியின் முன் உள்ள சவால்கள்
இந்நிலையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ரணில் விக்கிரமசிங்க புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை மக்களின் எதிர்ப்புக்கு இடையே பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பாரா என்பது அடுத்த கேள்வி. பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து, இந்தியா இலங்கைக்கு 3 புள்ளி 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிவாரண உதவியை வழங்கியுள்ளது.
இலங்கை வெளிநாடுகளிடம் இருந்து வாங்கிய மொத்த கடனில் 15 சதவீதம் சீனாவிடம் இருந்து வாங்கியதாகும். சீனாவுக்கு அடுத்ததாக இலங்கைக்கு அதிகக் கடன் வழங்கிய நாடான ஜப்பான் உள்ளது, எனினும் முறையான அரசாங்கம் அமையும் வரை மீண்டும் கடன் வழங்க மறுத்துள்ளமை இலங்கைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம்
இதற்கு அடுத்தபடியாக இலங்கைக்கு உள்ள வாய்ப்பு சர்வதேச நாணய நிதியம். இலங்கைக்கான பொருளாதார மீட்புத்தொகை தொடர்பான பேச்சுவார்த்தைள் விரைவில் முடிந்துவிடும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறியுள்ளார்.
ஒருவேளை சர்வதேச நாணய நிதியம் உதவி செய்யும் என்றாலும், வரிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட மக்களை பாதிக்கும் நிபந்தனைகளை விதிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் மக்களின் எதிர்ப்பு இன்னமும் அதிகமாகவே செய்யும்.
தற்போதுள்ள சூழலில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்குப்பதே ரணில் விக்கிரமசிங்கேவுக்கு விடுக்கப்பட்ட பெரும் சவாலாகப் பார்க்கப்படும் நிலையில், அதற்கு இணையாக அவர் அரசியல் நெருக்கடியையும் சந்திக்கவேண்டி இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் அவதாகள் கூறியுள்ளனர்.