நாட்டை புரட்டிப்போட்ட பேரழிவு ; மத்திய வங்கியின் அதிரடி கடன் வசதிகள்
சமீபத்திய புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை இலக்கம் 04 மூலம் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுகையில், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு எழ உதவுவதே இதன் நோக்கமாகும்.
பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கோரும் எழுத்துப்பூர்வமான அல்லது இலத்திரனியல் கோரிக்கைகளை ஜனவரி 15ஆம் திகதிக்குள் வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள கடன்களுக்கான அசல் மற்றும் வட்டி தவணைகளை 3 முதல் 6 மாதங்கள் வரை இடைநிறுத்த வேண்டும்.

ஒத்திவைக்கப்பட்ட தவணைகளுக்கான வட்டி, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட வீதத்திலேயே விதிக்கப்பட வேண்டும். ஒத்திவைக்கப்பட்ட தொகைக்கு மேலதிக வட்டி எதுவும் விதிக்கப்படக்கூடாது.
இடைநிறுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு, குறைந்தது 3 மாத சலுகைக் காலத்திற்குப் பின்னரே கடனை திருப்பிச் செலுத்துதல் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். கடன் பெறுபவர்களின் திருப்பிச் செலுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டு புதிய கடன் வசதிகளை வங்கிகள் நீட்டிக்க வேண்டும்.
2 ஆண்டுகள் வரையிலான கடன்கள் அதிகபட்சமாக 9% நிலையான வட்டி விகிதத்தைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கடன் வாங்குபவரின் தற்போதைய விகிதத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
நீண்ட கால கடன்களுக்கான வட்டி விகிதங்கள், 2 ஆண்டுகளுக்குப் பிறகு சராசரி வழங்கும் வீதத்தைப் பயன்படுத்தி மீண்டும் விலை நிர்ணயம் செய்யப்படலாம்.
ஜனவரி 31, 2026 வரை, பாதிக்கப்பட்ட கடனாளிகளுக்கு வங்கிகள் பின்வரும் கட்டணங்களை இடைநிறுத்த வேண்டும்.
காசோலைகள் திரும்புவதற்கான கட்டணங்கள் கொடுப்பனவை நிறுத்துவதற்கான கட்டணம் தாமதக் கட்டணங்கள் மறுசீரமைப்பு கட்டணங்கள் தண்ட வட்டி மேலும், இந்தக் காலப்பகுதியில் தானியங்கி முறை மூலம் விதிக்கப்பட்ட எந்தவொரு கட்டணத்தையும் 3 வேலை நாட்களுக்குள் வங்கிகள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
வங்கிகள் மறுசீரமைப்பு விதிமுறைகளைத் தெளிவாகத் தெரிவித்து, கடன் பெறுபவரின் சம்மதத்தைப் பெற வேண்டும்.
நிவாரண கோரிக்கையை நிராகரித்தால், அதற்கான எழுத்துப்பூர்வமான காரணங்களை வழங்கி, மத்திய வங்கிக்கு மேல்முறையீடு செய்யக் கடனாளியின் உரிமையை அவருக்குத் தெரிவிக்க வேண்டும்.
வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும் வணிக மறுசீரமைப்புக்கு உதவவும் அரசாங்கம் தலைமையிலான அனர்த்த உதவிக்கு இந்த நிவாரணப் பொதி துணைபுரிகிறது என்று மத்திய வங்கி கூறியுள்ளது.