Mrs. Sri Lanka புஷ்பிகா கிரீடம் பறிக்கப்பட்ட வழக்கு; இறுதித் தீர்ப்பு
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிசஸ் ஸ்ரீலங்கா' (Mrs. Sri Lanka) அழகிப் போட்டியில் வெற்றி பெற்ற புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்த கிரீடத்தைப் பலவந்தமாகப் பறித்து, அவருக்குக் காயம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு, 2026 ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
வழக்கின் பிரதான சந்தேகநபர்களாக முன்னாள் 'மிசஸ் வேர்ல்ட்' (Mrs. World) அழகி கரோலின் ஜூரி மற்றும் ஆடை வடிவமைப்பாளர் (Fashion Designer) சூலா பத்மேந்திரா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேடைக்குள் அத்துமீறி நுழைந்த கரோலின் ஜூரி
இந்த வழக்கு திங்கட்கிழமை (22) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, தீர்ப்பு வழங்கப்படும் திகதியை நீதவான் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதால், அடுத்த விசாரணைத் திகதியான ஒக்டோபர் 17 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என அவர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டுகளின்படி, இந்தச் சலசலப்பான சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் (Nelum Pokuna Theatre) நடைபெற்ற 'மிசஸ் வேர்ல்ட் ஸ்ரீலங்கா' அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றின் போது அரங்கேறியது.
அப்போட்டியில் புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டு, அவருக்குக் கிரீடம் சூட்டப்பட்ட சில நிமிடங்களில், மேடைக்குள் அத்துமீறி நுழைந்த கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரா ஆகிய இருவரும் புஷ்பிகாவைத் தாக்கி, அவரது தலையிலிருந்த கிரீடத்தைப் பலவந்தமாகப் பறித்துச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான சாட்சிப் பதிவுகள் மற்றும் சான்றாதாரங்களைச் சோதனையிடும் நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த விசாரணைத் திகதிகளிலேயே முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகவும், தற்போது வழக்கு இறுதித் தீர்ப்புக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது