ஐ.நா விடம் கர்தினால் முன்வைத்த கோரிக்கை
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை வெளிக் கொண்டுவரவும் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்கவும் ஐ. நா மனித உரிமைகள் பேரவை தலையிட வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் பேசிய அவர்,
தற்கொலை குண்டுத் தாக்குதலில் 82 குழந்தைகள் உட்பட 269 பேர் கொல்லப்பட்டதுடன், 14 நாடுகளைச் சேர்ந்த 47 வெளிநாட்டினர் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததகவும் கூறினார்.
தற்கொலை குண்டு தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போதும் இந்த படுகொலையில் பெரும் அரசியல் சதித்திட்டம் இருப்பது அடுத்தடுத்த விசாரணைகளில் தெரியவந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் பலமுறை தாம் கோரிக்கை விடுத்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.
அத்தோடு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணருவதற்கும், பொறுப்பு கூறவேண்டியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு பதிலாக, நீதிக்காகக் குரல் கொடுப்பவர்களை அடக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
எனவே சாட்சிய சேகரிப்பு நடவடிக்கையோடு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை கண்டறிய பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என பேரவையையும் அதன் உறுப்பு நாடுகளையும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார்.