தங்கப் பதக்கத்தை வென்ற ருமேஷ் தரங்கவிற்கு கார் பரிசு!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் முதல் தங்கப் பதக்கத்தை வென்ற ருமேஷ் தரங்கவிற்கு, ஜப்பானிலுள்ள இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினால் ஹோண்டா வெசல் ரகத்தைச் சேர்ந்த புதிய கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
இலங்கையர்களைக் கொண்ட இந்த சங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஜப்பானுக்கு வந்திருந்த இலங்கை விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோருக்காக 29ஆம் திகதி இரவு நகோயாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விசேட இரவு விருந்தை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ஜனக் குமாரசிங்க மற்றும் இலங்கை ஒலிம்பிக் குழுவின் அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில், குறித்த காரின் சாவி அடையாளமாக ருமேஷிடம் வழங்கப்பட்டது.
கடந்த 28ஆம் திகதி இரவு ருமேஷ் பெற்றுக்கொண்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கான தங்கப் பதக்கத்தை வழங்கும் நிகழ்வு, நேற்று (29) ஜப்பான் நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
அந்த நிகழ்வு நிறைவடைந்த உடனேயே, தங்கப் பதக்கத்துடன் ருமேஷ், ஜப்பானிலுள்ள இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இந்த கௌரவிப்பை ஏற்றுக்கொள்வதற்காக அங்கு வந்திருந்தார்.
இதன்போது ருமேஷுக்கு பரிசாக வழங்கப்பட்ட குறித்த வாகனம் ஜப்பானிலிருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் வரையிலான அனைத்து அனுசரணைச் செலவுகளையும் அந்த சங்கமே ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.