முற்றுகை செய்யப்பட்ட டின் மீன் தயாரிப்பு நிறுவனம்
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் உரிமம் இன்றி பன்னல, எலபடகம பகுதியில் இயங்கி வந்த டின் மீன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (7) முற்றுகையிட்டது.
நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அதன் போட்டித் திறன் மேம்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

டின் மீன்கள்
இதன்போது சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான டின் மீன் கையிருப்பு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் தயாரிக்கப்படும் டின் மீன்கள் சிறப்பு அங்காடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயாரிப்பு திகதியைக் குறிப்பிடாமை, அந்த டின் மீன்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை, விற்பனை செய்தமை மற்றும் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் டின் மீன் கையிருப்பும் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.