பாடசாலை மாணவனின் பாணுக்குள் கஞ்சா; பொலிஸார் அதிர்ச்சி
கடவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் காலை உணவுக்காக பாடசாலைக்கு கொண்டு சென்ற மீன் பாணுக்குள் இருந்து 2 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (09) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பாண் விற்கும் போர்வையில் கஞ்சாவிற்பனை
கடவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் காலை உணவுக்காக பாடசாலைக்கு மீன் பாண் ஒன்றை கொண்டு சென்றுள்ளார். பாடசாலை மாணவன் மீன் பானை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது பாணுக்குள் இருந்த 2 பொதிகள் கண்டுள்ளார்.
இதனையடுத்து மாணவன் பாணுக்குள் இருந்த 2 பொதிகளை ஆசிரியரிடம் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆசிரியை, பாடசாலை மாணவனின் தாயாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய போது, மாணவனின் தாயார் பாண் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டியிலிருந்து மீன் பாணை வாங்கியதாக கூறியுள்ளார்.
அதோடு மாணவன் பாடசாலைக்கு சென்ற பின்னர் குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி வந்து மீன் பாணை மாணவனுக்கு சாப்பிட கொடுக்க வேண்டாம் என்று கூறியதாகவும் ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆசிரியை இது தொடர்பில் அதிபருக்கு தெரியப்படுத்திய நிலையில், அதிபர் இது பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரின் விசாரணையில், குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி பாண் விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி வேறொரு நபருக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கஞ்சா பொதிகள் அடங்கிய மீன் பாணை தவறுதலாக பாடசாலை மாணவனுக்கு கொடுத்துள்ளதாக தெரியவந்த நிலையில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.