புற்று நோயாளர்களுக்கு தடுப்பூசி குறித்த முக்கிய விடயம் அறிவிப்பு
புற்றுநோயாளர்கள் தடுப்பூசியை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என இலங்கையின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவர்கள் அபாய நிலைமையை அடையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே புற்றுநோயாளர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியமானதாகும் என்று புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சச்சினி ரத்நாயக்க தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் பட்சத்தில் அவர்கள் அபாய நிலைமையைக் அடையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகும்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டமையால் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகக் காணப்படுபவர்களுக்கு மீண்டுமொரு நோய்நிலைமை ஏற்படும் போது அதனை எதிர்த்து போராடுவது கடினமாகும். எனவே புற்று நோயாளர்கள் தமது புற்று நோய்க்கான மருந்துகளை தொடர்ச்சியாக எடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
அதே போன்று புற்று நோயிலிருந்து குணமடைந்து மருந்துகளை பாவித்துக் கொண்டிருப்பவர்கள் வைத்தியர்களின ஆலோசனைகளையும் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு இவ்வாறானவர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வெளியிடங்களுக்கு செல்லாமல் அதே பிரதேசத்திலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறில்லை எனில் பிரதேசத்திலுள்ள கொவிட் சிகிச்சை நிலையத்தில் தம்மை பதிவு செய்து நடமாடும் சேவை ஊடாகவேனும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.