ஆடி மாதத்தில் திருமணம் செய்யலாமா?
ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருவதால் எந்த சுபநிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆடி மாத சிறப்புகள்
கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இதற்கு கடக மாதம் என்று பெயர்.
அதாவது தகப்பனைக் குறிக்கும் சூரியன், தாயாரைக் குறிக்கும் சந்திரனின் சொந்த வீடான கடகத்தில் இணையும் மாதம் இது.
இது இறைவன் அம்பிகையின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம்.
ஆன்மிக ரீதியாக நோக்கினால் தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலமிது என்பதால் பெண் என்கிற சக்தி ஆடி மாதத்தில் மிகவும் மகத்துவம் பெறுகிறாள் என்று கூறப்படுகிறது.
ஆடி மாதத்தில் திருமணம்
இறை வழிபாட்டிற்காக இந்த மாதத்தினை ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் திருமணங்கள் நடத்துவதில்லை.
ஆடி மாதத்தில் மழையும் காற்றும் அற்புதமாக இருக்கும்.
விவசாயத்திற்காக அதிக பணம் செலவாகிவிடும் எனவே திருமணத்திற்கு பணத்தை செலவு செய்வது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினாலும் ஆடியில் திருமணங்களை நடத்துவதில்லை.
ஆடியில சேதி மட்டும் சொல்லி விட்டு அடுத்த மாதமான ஆவணியில் பரிசம் போட்டு திருமணம் நடத்துகின்றனர்.
ஆடியில் தாய் வீடு
ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் இணை பிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக என்றும் கூறப்படுகிறது.
புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயார் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும்.
மணப்பெண் இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் செல்கின்றனர் .