நாட்டின் தலைவராக ஒரு பேருந்து சாரதி வர முடியாதா? கேள்வி எழுப்பிய சஜித்
பொதுமக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தி தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அது சுகாதாரம் மற்றும் கல்வித்துறையை இலக்காகக் கொண்டு இன்னும் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்பாற்றுவதும், திருட்டை முறியடிப்பதும் இதில் மிக முக்கியமான பகுதியாகும்.
இந்த வேலைத்திட்டங்களை முறையாக செயற்படுத்த முடியாத சில இடதுசாரி சோசலிசக் கட்சிகளைச் சேர்ந்த ஒரு குழுவினர் பெரும் சவால்களையும் அவமானங்களையும் கேலிகளையும் செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச பேருந்தின் சாரதி ஒருவர் நாட்டின் தலைவராக வர முடியுமா என்று தம்மை அவமானப்படுத்தினாலும், தற்போதைய இந்தியப் பிரதமர் கூட தொடரூந்தில் சிறிது காலம் தேநீர் விற்றவர் என்பது அவர்களுக்குத் தெரியாதது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அவிசாவளை சீதாவக்க தேசிய பாடசாலைக்கு நேற்று (29-12-2022) 50 இலட்சம் ரூபா பெறுமதியான பேருந்தை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி நிதியில் இருந்து மக்களுக்கு மருந்துகள், பேருந்துகள், கணனி போன்றவற்றை பகிர்ந்தளிக்கும் போது, மக்களை அவமதிக்கும் தரப்பினர் தமது கட்சி அலுவலகங்களை ஆடம்பரமாக்குகின்றனர்.
நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை தற்போது மிக முக்கியமான கடமையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.