ஐயப்பன் மாலைபோட்டவர்கள் சிராத்த காரியங்கள் செய்யலாமா?
ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற இந்த வேளையில்,மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா என பலருக்கும் குழப்பம்.
நம்மையும் நம்மைப் பெற்றவர்களையும் இந்த உலகுக்கு அளித்த, கடவுளிடம் மாறாத பக்தி செலுத்தவேண்டும். கடவுளுக்கு நிகரான முன்னோரைத் துதிக்கவேண்டும் என கூறுகிறது சாஸ்திரம்.
இந்த வேளையில், ஐயப்பனுக்கு மாலையிட்டு விரதமிருக்கிற நம்மில் பலருக்கும் எழும் கேள்வி, ‘மாலை போட்டு விரதமிருக்கும் போது, சிராத்த காரியங்கள் செய்யலாமா? என்பதுதான். சிராத்தமோ தர்ப்பணமோ செய்வது என்பது நம் கர்மா சம்பந்தப்பட்ட காரியம்.
ஒருவரின் பிறந்தநாள் என்பது நட்சத்திரத்தின்படி கொண்டாடப்படுகிறது. ஆனால் பலர் தேதியைக் கொண்டே கொண்டாடுகிறார்கள். அதேபோல், சிராத்த காரியங்கள், திதி அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகின்றன.
வருடந்தோறும் தாயாரோ தந்தையோ இறந்த அந்தத் திதியில் அவர்களுக்கான காரியங்களைச் செவ்வனே செய்துவிடவேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவே, சிராத்தம் முக்கியம். தர்ப்பணம் மிக மிக அவசியம்.
பம்பா நதி ஐயப்ப பக்தர்களுக்கு புதிதல்ல. பம்பையின் மகத்துவமும் தெரியாததல்ல. கங்கை போல், காவிரி போல், தாமிரபரணி போல் புண்ணியத்தை நமக்கு வழங்குகிற நதி பம்பா நதி .
இந்த பம்பா நதியில், நதிக்கரையில் ஸ்ரீராமபிரான் தன் தந்தை தசரதச் சக்கரவர்த்திக்கான தர்ப்பணத்தைச் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, சிராத்த நாள் வருகிறதே என்பதற்காக, மாலையணிவதை, விரதம் மேற்கொள்வதைத் தள்ளிப் போடவேண்டாம் என குருசாமிமார்கள் வலியுறுத்துகிறார்கள்.