அமைச்சரவை மாற்றம் ஒரு நாடகம்!
அமைச்சரவை மாற்றம் ஒரு நாடகம் என ஜே.வி.பி. விமர்சித்துள்ளது.
முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, நாடாளுமன்ற மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளை சட்ட ரீதியாகவும் நிலையாகவும் பேணுவதற்காக நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று, நியமித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று, (04) முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் அமைச்சுப் பதவி மற்றும் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சபைத் தலைவர் மற்றும் பிரதம கொறடா ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளதால், இந்த அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் நிலவுகின்ற தேசிய சவால்களை தீர்ப்பதற்கு பங்களிக்குமாறு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் ஒரு நாடு என்ற வகையில் எதிர்நோக்கும் பொருளாதார சவாலை வெற்றிகொள்வதற்கும் நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
எனினும் சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, பஸில் ராஜபக்ச என எவருக்கும் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையிலேயே நேற்று பதவி துறப்பு, இன்று பதவி ஏற்பு என அமைச்சரவை மாற்றம் ஒரு நாடகம் என ஜே.வி.பி. விமர்சித்துள்ளது