30 தோட்டாக்களும் தீரும் வரை சுட்டுக்கொல்லப்பட்ட வர்த்தகர் ; அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்
களுத்துறை – நாகொட வீதியின் கல்லஸ்ஸ பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காகவும் தனியான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீவிர சிகிச்சை
நேற்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், உயிரிழந்த நபரைக் குறிவைத்து T-56 ரக துப்பாக்கியால் 30 தோட்டாக்களும் தீரும் வரை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த தாக்குதலுக்கு முன்னர் சந்தேகநபர்கள் வியாபார நிலையமொன்றுக்கு அருகில் துப்பாக்கியைத் தயார் செய்யும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
54 வயதுடைய உணவக உரிமையாளர் தனது மனைவியுடன் சிற்றூந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது , உந்துருளியில் பின்தொடர்ந்து வந்த இருவரில் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதில் காயமடைந்த அவரது 52 வயதுடைய மனைவி, களுத்துறை நாகொட மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சில வருடங்களுக்கு முன்னர் அமிலத் தாக்குதலுக்கு உள்ளானதால் உயிரிழந்தவரின் இரு கண்களின் பார்வையும் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படும் போம்புவல நவீனுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்திருக்கலாம் எனவும், போதைப்பொருள் வர்த்தகப் பணப் பரிவர்த்தனை தொடர்பான முரண்பாட்டை அடுத்து இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.