கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது!
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வர்த்தகர் ஒருவர் தாய்லாந்துக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவரே நேற்றையதினம் (28-04-2024) கைதாகியுள்ளார்.
இவர் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதான வர்த்தகர் என்பதுடன் இவர் நேற்று தாய்லாந்தின் பேங்கொக் நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது விமான நிலைய குடிவரவு பிரிவினர் இவருடைய ஆவணங்களைப் பரிசோதித்த போது அவை சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டுள்ளன.
பின்னர், இவரது ஆவணங்களைத் தொழில்நுட்பம் ஊடாக பரிசோதனை செய்த போது இந்த கடவுச்சீட்டு போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த வர்த்தகர் பொய்யான ஆவணங்களைத் தயாரித்து இலங்கையர் ஒருவரை இத்தாலிக்கு அனுப்ப முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவருக்கு எதிராக பயணத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் இந்த வர்த்தகர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.