கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ; சாதுர்யமாக 80 பேரின் உயிரை காப்பாற்றிய சாரதி
தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, இன்று (26) அதிகாலை கினிகத்தேனை பகுதியில் பாரிய விபத்திலிருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இன்று அதிகாலை ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, கடவலை வளைவுப் பகுதியில் இப்பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அதன் தடையாளி (Brake) கட்டமைப்பு செயலிழந்துள்ளது.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சரிவில் இறங்கியபோது, வீதியோரமிருந்த மணல் மேடு ஒன்றின் மீது பேருந்தினை மோதச் செய்து சாமர்த்தியமாக நிறுத்தினார்.
சாரதியின் இந்த துரித மற்றும் சமயோசித செயலால் பேருந்து பள்ளத்தில் விழுவது தவிர்க்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 80 பயணிகள் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.
விபத்தைத் தொடர்ந்து, பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் இணைந்து பயணிகளை மற்றுமொரு பேருந்தில் ஏற்றி தங்களது இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து கினிகத்தேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


