போதை மயக்கத்தில் பஸ்ஸை பறக்கவிட்ட சாரதி ; விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சம்பவம்
பேருவளை நகரத்தில் பேருந்து சாரதிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை பேருவளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு இன்று (04) முன்னெடுத்திருந்தது.
இதன்போது அளுத்கம - களுத்துறை தனியார் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், அவர் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டார்.
கஞ்சா பயன்பாடு
களுத்துறை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் சாரதியை ஆஜர்படுத்திய போது, அவர் கஞ்சா பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
அதன்படி, 41 வயதான சந்தேகநபரான சாரதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மருத்துவ அறிக்கைகளின்படி, அவர் சிறிது காலமாக கஞ்சாவுக்கு அடிமையாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பேருவளை பொலிஸாரின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.