2025 வரவு – செலவுதிட்டம் ; வட மாகாணத்திற்கு கிடைத்த நிதி தொடர்பில் வெளியான தகவல்
2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைத் வினைத்திறனாகச் செலவு செய்து, இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், 2026ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் நேற்று (01) காலை நடைபெற்றது.

நிதி முன்னேற்றம்
இந்நிகழ்வில் கலந்துகொண்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த ஆளுநர், 2025ஆம் ஆண்டில் மாகாணத்தின் நிதி முன்னேற்றத்தில் மிகச் சிறப்பான நிலையை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கடந்த 2024ஆம் ஆண்டு எமது மாகாணத்துக்கு 4 பில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டு 8 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை 2026ஆம் ஆண்டுக்காக அண்ணளவாக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி ஆணைக்குழுவும் ஜனவரி மாதத்திலிருந்தே எமது திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாகச் செயற்படுத்த முடியாத மேலதிகத் திட்டங்களுக்குரிய நிதியை, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்களிடம் கோருவதற்கு எமக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, மாகாண சபைகளுக்கு நிரல் அமைச்சுக்களின் நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
எனவே, இவ்வாண்டில் எம்மால் முன்னரை விடக் கூடுதலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
பிரதம செயலாளர் முதல் கள உத்தியோகத்தர்கள் வரை அனைவரினதும் கூட்டு முயற்சியாலேயே இம்முறை எம்மால் நிதிப் பயன்பாட்டில் தேசிய ரீதியில் சிறப்பான அடைவை எட்ட முடிந்துள்ளது. இருப்பினும், நாம் வெறும் நிதிப் புள்ளிவிவரங்களை மட்டும் பார்க்காமல், இத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.