பிரித்தானிய விசா மோசடி ; ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் விசாரணையில்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியும், எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கையும் பலரை வெளிநாடுகளை நோக்கி பயணிக்கத் தூண்டி வருகிறது.
இந்த சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு, பிரித்தானியாவின் Health and Care Worker Visa முறையை மையமாக வைத்து ஒரு பெரும் மோசடி வலை செயல்பட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
லண்டனில் உயர்ந்த சம்பளம், ஆடம்பர வாழ்க்கை எனும் போலி வாக்குறுதிகளை நம்பி, பல இலங்கையர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பு, நகைகள் மற்றும் சொத்துகளை விற்று, ஒரு விசாவிற்காக 40,000 பவுண்டுகள் (சுமார் 1.5 கோடி ரூபாய்) வரை மோசடி முகவர்களிடம் வழங்கி ஏமாந்துள்ளனர்.

இந்த மோசடி கும்பல்கள், தகுதியே இல்லாதவர்களுக்கு போலி NVQ சான்றிதழ்கள் மற்றும் போலியான ஆங்கில மொழித் தேர்வு முடிவுகளைத் தயாரித்து வழங்கியுள்ளதுடன், இல்லாத வேலைகளுக்காக Certificate of Sponsorship (COS) என்ற போலி வேலைவாய்ப்பு சான்றிதழ்களையும் வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சட்டவிரோதமாக மனிதக் கடத்தலில் ஈடுபடும் வகையில், போலி பாஸ்போர்ட்டுகள் மற்றும் குடும்ப உறவுகள் என்ற பெயரில் விசா பெறும் முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், பிரித்தானிய Home Office மேற்கொண்ட அதிரடி சோதனையில், சுமார் 4,900 இலங்கை ஊழியர்களின் விசாக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, பல நிறுவனங்களின் அனுசரணை உரிமங்கள் (Licences) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையிலும் லண்டனிலும் கிளைகளைப் பரப்பியுள்ள இந்த மோசடித் தரகர்கள், போலி ஆவணங்களைத் தயாரிப்பதை ஒரு தொழிலாகவே மாற்றியுள்ளனர்.
இதனால், நேர்மையாகப் படித்து தகுதியுடன் வெளிநாடு செல்லக் காத்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் முன்பு இத்தகைய மோசடிகளில் முன்னணியில் இருந்த சில நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, இன்று இலங்கை “மோசடிப் பேர்வழிகள்” என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் சிக்கியவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தனிநபர்களின் பேராசையால், நேர்மையாக உழைக்க வெளிநாடு செல்லும் இலங்கையர்களும் இன்று சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்த பலர், இன்று லண்டன் வீதிகளில் வேலை இன்றியும், அகதி நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
பலர் நாடு கடத்தப்படும் அபாயத்திலும் உள்ளனர். வல்லுநர்கள் எச்சரிப்பது என்னவெனில், வெளிநாட்டில் ஒரு வேலைக்கான விசா பெற இவ்வளவு பெரிய தொகை செலவாகாது. முகவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டாலே அது மோசடி என்பதை உணர வேண்டும்.
போலிச் சான்றிதழ்கள் மூலம் ஒருமுறை தப்பித்தாலும், எந்நாளாவது சட்டத்தின் பிடியில் சிக்க நேரிடும்; அப்போது எதிர்காலமே இருண்டு போகும். பிரித்தானிய அரசாங்கம் தற்போது விசா விதிமுறைகளை கடுமையாக்கியுள்ள நிலையில், போலி ஆவணங்கள் மூலம் நுழைவது இனிமேல் சாத்தியமற்றது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டு கனவு வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமே தவிர, நடுத்தெருவில் நிறுத்தக் கூடாது என்பதே பொதுவான எச்சரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. சட்டப்பூர்வமான வழிகளில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.