மணமகன் மயங்கி விழுந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!
பல்வேறு காரணங்களால் திருமணங்கள் நின்ற சம்பவங்கள் உண்டு. ஆனால் மணமகன் மயங்கி விழுந்ததால் பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் பல மாதங்களாகத் திட்டமிட்டு, ஏராளமானோரை அழைத்திருந்தபோதும் திருமணம் நடைபெறாமல் போனதால் வந்திருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மண்டபத்தை விட்டு வெளியேறிய மணமகள்
கடந்த ஞாயிறன்று (டிசம்பர் 15) இரவு திறந்தவெளி மண்டபத்தில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன. இந்நிலையில் மணமகன் அர்னவ் குமார், குளிர் தாங்க முடியவில்லை எனக் கூறியிருக்கிறார்.
அப்போது, வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. எனினும் சடங்குகள் தொடர்ந்து நடைபெற்றதால் 28 வயதான அர்னவ் திடீரென மயங்கி விழுந்தார்.
அன்றைய நாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் நோன்பு இருந்ததாலும் தாங்க முடியாத குளிராலும் மணமகன் மயங்கி விழுந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை , மணமகளான பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கிதா, 25, அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் மணமகன் அர்னவால் குளிரைத் தாங்க முடியாமல் போனது, அவரது உடலில் வேறு பிரச்சினைகள் இருப்பதற்கு அறிகுறி எனக் கூறி, மணமகள் அங்கிதா திருமணத்தை நிறுத்திவிட்டு, மண்டபத்தைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகின்றது.
குளிர் தாங்க முடியாமல் மணமகன் மயங்கி விழுந்ததை அடுத்து மணமகள் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் உறவினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.