கெஹெலியவுக்கு எதிரான கையூட்டல் வழக்கு தாக்கல் நிறைவு
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால் இது தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுறுத்த பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம தீர்மானித்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விசாரணை தொடர்பாக பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர்.
நீதவான் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று தெரிவித்தனர்.
அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை முடிவுறுத்திய பிரதான நீதவான், பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.