இலங்கையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் காட்போட்டில் தயாராகும் பிரதேப்பெட்டிகள்
கொழும்பு தெகிவளை மவுண்ட்லவேனியா நகரில் உள்ள தொழிற்சாலையொன்றில் தொழிலாளர்கள் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் உடல்களை வைப்பதற்கு பயன்படுத்தக்கூடிய பிரதேப்பெட்டிகளை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் நீண்ட காட்போட்டினை ஒட்டி அதனை பிரதேப்பெட்டியாக மாற்றுகின்றனர். மீள்சுழற்சி செய்யப்பட்ட பேப்பர்கள் மூலம் அந்த பிரதேப்பெட்டிகள் செய்யப்படுகின்றன மரத்தால் செய்யப்படும் பிரதேப்பெட்டிகளை விட மலிவானவை என இந்த யோசனையை முதலில் முன்வைத்த உள்ளுராட்சி அதிகாரி பிரியந்த சகாபந்து தெரிவிக்கின்றார்.
கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்துவரும் நிலையில் சிலர் தங்கள் நேசத்திற்குரியவர்களை அடக்கம் செய்வதற்கு இந்த காட்போட்டினால் தயாரிக்கப்பட்ட பிரதேப்பெட்டிகளை பயன்படுத்துகின்றனர்.
கொவிட் உட்பட பல்வேறு காரணங்களால் நாட்டில் நாளாந்தம் 400 பேர் உயிரிழப்பதாகவும் சகாபந்து கூறியுள்ளார் .
சகாபந்து தெகிவளை மவுண்ட்லவேனியா மாநகரசபையின் உறுப்பினர். 400 பிரதேப்பெட்டிகளை தயாரிப்பதற்கு இருபது முப்பது மரங்களை நீங்கள் தறிக்கவேண்டும் இந்த சூழல் அழிவை தடுப்பதற்காக நான் மாநகரசபையின் சுகாதார குழுவிடம் இந்த யோசனையை முன்வைத்தேன் என அவர் கூறுகின்றார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுமக்கள் மரத்தால் செய்யப்பட்ட பிரேதப்பெட்டிகளை வாங்க முடியாத நிலையில் உள்ளனர் என அவர் தெரிவிக்கின்றார்.
காட்போட்டினால் தயாரிக்கப்படும் பிரேதப்பெட்டியின் விலை 4500 ரூபாய், ஆனால் மரத்தினால் தயாரிக்கப்படும் சாதாரண பிரேதப்பெட்டியின் விலை 30,000 ரூபாய் என தெரிவிக்கும் சகாபந்து, அந்த பெட்டிக்குள் 100 கிலோவரை வைக்கலாம் எனவும் தெரிவிக்கின்றார்.
கொவிட்டினால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தவர்களே இந்த வகை பிரதேப்பெட்டிகளை முதலில் பயன்படுத்தியபோதும், தற்போது சூழல் குறித்த ஆர்வமுள்ளவர்களும் இதனை பயன்படுத்துகின்றதாகவும் அவர் கூறினார்.
2020 முதல் சுமார் 350 காட்போர்ட் பிரதேப்பெட்டிகளை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகின்றபோதும், மாநகரசபையின் உத்தரவின் பேரில் மேலும் 150 பிரேதப்பெட்டிகளை தயாரித்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் அதிகளவானவர்கள் இதற்கு ஆதரவளிக்கின்றதாக கூறிய சகாபந்து விநியோகமே பிரச்சினையாக உள்ளதாகவும் கூறுகின்றார்.









