இலங்கை வந்த இந்திய விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை; புலனாய்வு பிரிவு விசாரணை
இலங்கை வந்த இந்திய விமானத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நேற்றையதினம் (28) கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள்
இந்த வெடிகுண்டு மிரட்டலானது இந்தியன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானமொன்றுக்கே விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த விமானம் வழமைபோன்று நேற்று மாலை 04.05 மணிக்கு தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், வெடிகுண்டு மிரட்டல் காரணமாக 08 நிமிடங்களுக்கு முன்னதாக கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன் போது விமானத்தில் 108 பயணிகள் மற்றும் 08 பணியாளர்கள் இருந்துள்ளனர்.
பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள இந்தியன் எயார்லைன்ஸ் தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள மேலாளருக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, மீட்பு நடவடிக்கை அதிகாரிகள் கட்டுநாயக்கவிமான நிலைய ஓடுபாதைக்கு வரவழைக்கப்பட்டு சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஏற்கனவே இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கட்டுநாக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.