ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொந்தளித்த ஜீவன்
ரிஷாட் பதியுதீனின் (Rishad Bathiudeen) இலத்தில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் கேவலமான அரசியலை செய்து வருகிறார்கள். 18 வயதோ, 14 வயதோ 40 வயதோ யாருக்கு தவறு நடந்தாலும், தவறு தவறுதான் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) நடைபெற்ற மூன்று சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் இன்று (04) தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) , வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) , இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு ஆகிய சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது.
8 வருடங்களாக இதுபோன்ற சம்பவங்கள் ரிஷாட் இலத்தில் நடந்துள்ளதாக வாக்குமூலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரிஷாட்தான் இதற்கு காரணமென நான் கூறவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவிட்டமைக்கு அவரும் ஒரு காரணம் என்றார்.
பாதிக்கப்பட்ட சிறுமி ரிஷாட் இலத்தில் எழுதியதாகக் கூறுகிறார்கள். இதெல்லாம் பொய்யென தெரிவித்த ஜீவன் தொண்டமான், இதுபோன்ற விடயங்களை சும்மா வேடிக்கைப் பார்க்கப்போவதில்லை என்றார். இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
கடுமையான தண்டனை வழங்குவதன் ஊடாகவே, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடப்பதை தவிர்க்க முடியும். மேலும் 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களையும் தண்டிக்க வேண்டும் என்றார்.
18 வயது வரையில் இலவசக் கல்வியை கட்டாயமாக்க வேண்டுமெனவும் இதன்போது கல்வி அமைச்சரிடம் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை ஒன்றையும் விடுத்தார்.