முல்லைத்தீவில் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட சடலம் மாயம்!
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பட்ட சடலம் ஒன்று, மாற்றி கையளிக்கப்பட்டுள்ளதாக திருமுறுகண்டியைச் சேர்ந்த உயிரிழந்த முதியவரின் குடும்பத்தார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமுறுகண்டியைச் சேர்ந்த குமாரன் கோபால் என்பவர் திடீரென உயிரிழந்திருந்தார். இந்நிலையில் பிசிஆர் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அவருடைய சடலத்தைக் உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
நேற்று பிசிஆர் முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில் தாத்தாவுக்கு கொரோனாத் தொற்றில்லை என்று எங்களுக்கு சுகாதாரத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று சடலத்தைப் பொறுப்பேற்பதற்காக அங்கு சென்றபோது சடலத்தைக் காணவில்லை.
அது குறித்து கேட்டபோது, சடலம் நாயாறுப் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றினால் பெற்றுச் செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் கூறப்பட்டதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை நாயாறுப் பகுதியைச் சேர்ந்தவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடைய சடலம் வவுனியாவிற்கு எரியூட்டுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் உரிய பதிலினை வைத்தியசாலை நிர்வாகம் தர மறுக்கிறார்கள். நாயாற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலம் எரியூட்டப்பட்டுவிட்டதா என்பது கூடத் தெரியாத நிலயைில் உள்ளோம் என்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.