கிணற்றுக்குள் சடலத்தை மறைத்து வைத்த சந்தேக நபர் கைது
தெமடகஹகந்த, நவ்தகல பகுதியில் வசித்து வந்த நிலையில் காணாமல் போன ஒருவர் நேற்று (6) சடலமாக மீட்கப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
42 வயதுடைய குறித்த நபரைக் காணவில்லை என அவரது மனைவி கடந்த மாதம் 14 ஆம் திகதி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைகள்
காணாமல் போன நபரின் சடலம் தெமடகஹகந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசப்பட்டு மண்ணால் மூடப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட காணியின் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டுள்ள மின்சார கம்பியில் சிக்கி அந்த நபர் இறந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அவர் மற்றொரு நபருடன் சேர்ந்து, கிணற்றில் சடலத்தை வீசி மண்ணால் மூடியிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளரும் அவருக்கு உதவிய நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.