கொழும்பு வைத்தியசாலை பிணவறையில் இருந்து மாயமான குழந்தையின் சடலம்
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்றில் உடல் காணாமல் போயுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தெமட்டகொடை காவல்துறை பிரிவில் உள்ள மாளிகாவத்தை தொடருந்து முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தொடருந்தொன்றின் கழிப்பறையிலிருந்து கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி குறித்த குழந்தையின் உடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பில் தெமட்டகொடை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், நீதவானின் உத்தரவின் பேரில், குழந்தையின் உடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டது.
குறித்த உடலம் தொடர்பில் கடந்த 29 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் மரண பரிசோதனை நடத்துவதற்காக தெமட்டகொடை காவல்நிலைய அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனை பிணவறைக்குச் சென்று, குழந்தையின் உடலம் தொடர்பில் விசாரித்தபோது, அதன் உடலம் அங்கிருந்து காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், இது குறித்த மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.