காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
பொலன்னறுவை, மனம்பிட்டிய - கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
புதன்கிழமை (17) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் பொலன்னறுவை - தலுகானை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும், டிப்பர் லொறி சாரதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17 ஆம் திகதி மாலை, அவரது மனைவி தனது கணவர் வீடு திரும்பவில்லை என பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதற்கமைய, டிப்பர் லொறியில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் தொழில்நுட்ப அமைப்பைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட பரிசோதனையில், மணல் ஏற்றி சென்ற குறித்த லொறி பொலன்னறுவை - மனம்பிட்டிய பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
பொலன்னறுவை - மைத்திரிபால சுற்றுவட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், குறித்த லொறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சாரதியின் சடலம் மனம்பிட்டிய கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களைக் கைதுசெய்ய மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.