ஆளுநர் நந்தலால் வீரசிங்க மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது!
ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னரே வெளிநாட்டுக் கடன்களை செலுத்தத் தவறியதாக அறிவிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.
எனவே இது தொடர்பில் , மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் அலி சப்ரி இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அப்போதைய நிதியமைச்சர் என்ற முறையில் தான் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும், மத்திய ஆளுநர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
அந்த முடிவினால் எந்த பிரச்சனையும் இருந்தால், அதற்கான பொறுப்பு என்னிடமே உள்ளது, அப்போது நான் நிதி அமைச்சராக இருந்தேன், அவற்றை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நந்தலால் வீரசிங்க சிறப்பான பணியை செய்தார்
நந்தலால் வீரசிங்க நாட்டிற்கு சிறப்பான பணியை செய்தார், அவரை அகற்ற ஒரு வகையான சதி உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம் இலங்கை ஏப்ரல் மாதத்திற்குள் 203 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைத் தீர்க்க வேண்டும் என்றும் கையிருப்பில் 17 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே இருப்பதாகவும் அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.
அத்துடன் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் பதவியில் இருந்து விலகும் போது 17 மில்லியன் அமெரிக்க டொலர்களே கையிருப்பில் இருந்ததாகவும், டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியை நிலைநிறுத்துவதற்கு பெரும்பாலான கையிருப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும் தாங்கள் எடுத்த முடிவின் காரணமாக குறைந்தபட்சம் தற்போதைய மதிப்பிலாவது ரூபாயை நிலைநிறுத்த முடிந்ததாகவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.