கறுப்பு ஜூலை சம்பவம்; பொலிஸார் மீது சந்திரிக்கா காட்டம்!
கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்களுக்காகக் கொழும்பில் நினைவேந்தலைக் கடைப்பிடிக்கவிடாமல் தடுத்தமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், அந்த சம்பவத்திற்கு பொலிஸார் துணைபோனமையும் கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.
கொழும்பு பொரளையில் நேற்றுமுன்தினம் இடம்பெறவிருந்த கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வை சிங்கள ராவய மற்றும் பொலிஸார் – இராணுவத்தினர் இணைந்து குழப்பியிருந்தனர்.
கறுப்பு ஜூலை விளக்கமளிக்கவேண்டிய அவசியமில்லை
அந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா,
கறுப்பு ஜூலை கலவரமொன்று மீண்டும் நாட்டில் இடம்பெறக்கூடாது என்பதுதான் ஜனநாயகத்தை விரும்பும் அனைவரினதும் பிரார்த்தனையாகும். அந்தச் சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது தொடர்பில் விளக்கமளிக்கவேண்டிய அவசியமில்லை.
கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்தவர்களைக் கொழும்பில் நினைவேந்த முற்பட்டமையைத் தடுத்து நிறுத்தியமை கண்டிக்கத்தக்கது.
அதோடு அங்கு பொலிஸார் நடந்துகொண்ட விதமும் கண்டனத்துக்குரியது என தெரிவித்த அவர் மக்கள் தம் நினைவேந்தல் உரிமையின் பிரகாரம் உயிரிழந்தவர்களை நினைவேந்தியபோதும் அதை இனவாதநோக்குடன் பார்த்த இனவாத அமைப்பையும் நான் வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.
மேலும் நாட்டில் மீண்டும் ஒரு கலவரத்துக்குத் தூபமிடும் இத்தகைய இனவாத அமைப்புக்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி,தெரிவித்தார்.