குருந்தூர்மலைக் குழப்பங்களின் பின்னணியில் பா.ஜ.க; அமெரிக்கத் தூதருக்கு சந்தேகம்
முல்லைத்தீவு, குருந்தூர்மலைச் சர்ச்சையில் இந்தியாவின் இந்துத்துவா அமைப்பான பாரதீய ஜனதாக் கட்சியின் தாக்கம் அல்லது பின்னணி உண்டா என அமெரிக்கத் தூதுவர் நேற்றுத் தம்மை யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழ்ப் பிரதிநிதிகளிடம் வினாவியதாக கூறப்படுகின்றது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட நேற்று (23) யாழில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அமெரிக்க தூதர் -தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு
இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணம் – கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இதன்போதே அமெரிக்கத் தூதுவர் மேற்படி சந்தேகத்தை எழுப்பியதாக கூறப்படுகின்றது. தூதுவரின் சந்தேகத்திற்கு பதிலளித்த சி.வி.கே. சிவஞானம்,
அப்படி ஒரு பின்னணியும் கிடையாது என்றும் இது இலங்கை அரசின் , ஆளும் தரப்பின் ஒரு வஞ்சகச் செயற்பாட்டுக்கு எதிராக இயல்பாகக் கிளர்ந்த தமிழ் மக்களின் மன எண்ணம் என்றும் தெளிவுபடுத்தினார்.
இதேநேரம் குருந்தூர்மலை விடயத்தையொட்டி, நாடாளுமன்றச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி சரத் வீரசேகர நாடாளுமன்றில் ஆற்றிய உரை சுட்டிக்காட்டப்பட்டது.
சரத் வீரசேகர சிறை செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும்
அத்துடன் வெளியில் பகிரங்கமாகக் சரத் வீரசேகரவால் கூற முடியுமா? வெளியில் கூறினால் ரஞ்சன் ராமநாயக்க போன்று அவரும் சிறை செல்லும் நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் அமெரிக்கத் தூதுவருக்கு தமிழ்ப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டப்பட்டதாகத் தெரியவந்தது.
மேலும் அமெரிக்க தூதுவருடனான சந்திப்பில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் ஆகியோருடன் அவர் கலந்துரையாடினார்.