பிக்பாஸ் சீசன் 8 புதிய தொகுப்பாளராக பிரபல நடிகர்... ப்ரோமோ காணொளியை வெளியிட்ட பொதுமக்கள்!
தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸை நடிகர் விஜய் சேதுபதி இம்முறை தொகுத்து வழங்குகிறார்.
கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் திடீரென விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்து வந்தன.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போகும் புதிய தொகுப்பாளர் தொடர்பில் இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது தெரியவந்தது.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்கான ப்ரோமா காணொளி இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக ப்ரோமோ காணொளி தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டு வந்த நிலையில், இம்முறை மாற்று முயற்சியாக பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் ப்ரோமோ காணொளி சென்னை உட்படத் தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் மக்களால் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்படி, சென்னை பெசன் நகர், திருச்சி பிரீஸ் ஓட்டல், மதுரை அம்பிகா கலைக் கல்லூரி, சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, திருநெல்வேலி, விருதுநகர் அப்சாரா சினிமாஸ், வேலூர் பழைய பேருந்து நிலையம், கடலூர், கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொதுமக்கள் ப்ரோமோ காணொளியை வெளியிட்டனர்.