மக்களை ஏமாற்றி பிழைக்கும் நபர்களுக்கு சாட்டையடி; யாசகம் பெற்று ரூ.1.60 கோடி நிதியுதவி !
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் உப அலுவலகம், ஆங்கினார் கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான முதியவர் ஒருவர், தனது வாழ்நாள் முழுவதும் யாசகம் பெற்றுச் சேர்த்த பணத்தை, தமிழக அரசுக்கு வழங்கியுள்ளமை பாராட்டுக்களை பெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள சூழலில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் தனது பங்களிப்பாக ரூ.10,000 நிதியை அவர் வழங்கியுள்ளார். மும்பையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது
குழந்தைகளின் திருமணக் கடமைகளை முடித்து, இல்லற வாழ்க்கையை நிறைவு செய்த நிலையில், தனது மனைவியின் மறைவுக்குப் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.
அன்றிலிருந்து யாசகம் பெற்றுத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, அதே யாசகம் மூலம் கிடைக்கும் வருமானத்தை சமூக நலப் பணிகளுக்காகச் செலவிட்டு வருகிறார்.
யாசகம் பெற்றுத் தனது தேவைகளைச் சுருக்கிக்கொண்ட அந்த முதியவர், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 40 அரசுப் பள்ளிகளுக்கு நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரங்கள் போன்ற அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து கொடுத்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தின்போது மதுரையில் தங்கியிருந்த அவர், ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 வீதம், 10 மாதங்களில் மொத்தம் ரூ.1 இலட்சம் நிதியை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.
அவரது இந்த உன்னத செயலைப் பாராட்டி, அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், சுதந்திர தின விழாவில் அவருக்குச் சிறப்பு விருது வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைத் தவிர தமிழகத்தின் பிற அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நேரில் சென்று நிவாரண நிதிகளை வழங்கியுள்ளார்.
கொரோனா நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி மற்றும் இலங்கைத் தமிழர் நிவாரண நிதி என இதுவரை மொத்தம் சுமார் ரூ.1.60 கோடிக்கும் அதிகமான தொகையைத் தமிழக அரசுக்கு அவர் வழங்கியுள்ளார்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தனது வாழ்நாளின் பெரும் பகுதியைச் சமூகத்திற்கும் அரசுக்கும் அர்ப்பணித்துள்ள முதியவரின் மனிதாபிமானமிக்க செயல், தற்போது பேசுபொருளாகியுள்ளது.