பசில் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ள தீர்மானம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட பதவிகளை முழுமையாக மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டில் இத்தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸை பதவியிலிருந்து நீக்குமாறு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் தவிசாளராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை நியமிக்குமாறும் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவை நியமிக்கமாறும் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ கட்சியின் முக்கிய பதவிகள் ஏதும் வகிக்காமல், கட்சியின் ஆலோசகராக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் 6ஆவது வருட நிறைவு மாநாட்டில் கட்சியின் உத்தியோகபூர்வமான பல தீர்மானங்கள் அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.