பசில் , கோட்டாபய நாட்டில் இல்லை; தனித்துவிடப்பட்ட நாமல் !
நாளையதினம் இலங்கை ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பசில் ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்க்ஷ நாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, இன்று (20) அதிகாலை வெளிநாடு சென்றுள்ளார்.
தனித்துவிடப்பட்ட நாமல்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானமான EK 659 இல் அவர் டுபாய்க்கு புறப்பட்டு அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை விமான நிறுவனத்தின் கோல்ட் ரூட் ஸ்பெஷல் என்ட்ரியின் ஊடாக முன்னாள் அமைச்சர் பிரவேசித்து தனியாக பயணித்துள்ளார். அவருடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ஜயநாத கெட்டகொட ஆகியோரும் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் பெரும் பணியைச் செய்திருந்தார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு ஒரு மத நிகழ்ச்சிக்காக விஜயம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன் காரணமாக கோட்டாபய மற்றும் பசிலின் வாக்குகளை நாமல் ராஜபக்ச இழந்துள்ளார்.