அரச வங்கியொன்றில் 656 மில்லியன் நிதி இழப்பு ; பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு
வெளிநாட்டு நாணய மாற்றுப் பணப்பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்கள் சிலருக்கு உரிய தொகையை விடக் கூடுதல் தொகை செலுத்தப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்து மக்கள் வங்கி உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
இந்தக் கோளாறு 2023 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியிலேயே ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில,
2023 மே முதல் 2026 மார்ச் வரையான காலப்பகுதியில் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் குறித்த தொகைக்கு மேற்பட்ட பணத்தைப் பெற்றுள்ளமையும் அண்மையில் கண்டறியப்பட்டு,அதன் பின்னர் முழுமையாக சரிசெய்யப்பட்டு விட்டது என்பதை பொதுமக்களுக்கு மக்கள் வங்கி அறியத்தர விரும்புகின்றது.
இது கண்டறியப்பட்ட உடனேயே முழுமையான உள்ளக மீளாய்வு நடவடிக்கையை வங்கி முன்னெடுத்திருந்ததுடன், உரிய செயற்பாட்டுக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் வலுவான நிர்வாகத்தில் வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு அமைவாக, இலங்கை மத்திய வங்கி உட்பட உரிய ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரத் தரப்புக்களின் ஆலோசனையின் கீழ் இவ்விடயத்தை வங்கி தற்போது மீளாய்வு செய்து வருகின்றது.
இவ்விடயத்தால் ஏற்பட்டுள்ள நிதிரீதியான இழப்பு சுமார் ரூபா 656 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இத்தொகையை வங்கி ஏற்கனவே மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்கான தனது நிதி அறிக்கைகளில் முழுமையாக உள்வாங்கியுள்ளது.
தற்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையில், மேலதிக நிதி இழப்பீடு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்டுள்ள கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அந்த இழப்பினை மீட்கும் நடைமுறைகளை வங்க ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், குறித்த வாடிக்கையாளர்களிடமிருந்து அதனை மீளப்பெறும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
தமது அன்றாட வங்கிச் செயற்பாடுகள், டிஜிட்டல் தளங்கள், மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் எவ்விதமான தங்குதடையுமின்றி வழக்கம் போல் இடம்பெற்று வருகின்றன
வங்கியின் வலுவான நிதியியல் இருப்பு மற்றும் சுமார் ரூபா 3.8 ட்ரில்லியன் சொத்துத் தளம் ஆகியவற்றின் பின்னணியில், வங்கியின் ஒட்டுமொத்த நிதியியல் உறுதிப்பாடு, இலாப மட்டம், அல்லது வாடிக்கையாளர்களின் நிதி மற்றும் வைப்புக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இவ்விடயத்தால் குறிப்பிடும்படியாக எவ்விதமான பாதிப்புக்களும் கிடையாது.
செயற்பாட்டு ரீதியான நேர்மை, நிர்வாகம், மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் அதியுச்ச தராதரங்களைப் பேணுவதில் மக்கள் வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்திவருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
