டி-20 பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி ; ஐசிசி எடுத்த முக்கிய தீர்மானம்
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, ஸ்காட்லாந்து அணி தற்போது 'சி' (Group C) குழுவில் இத்தாலி, நேபாளம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் போட்டியிடவுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உத்தரவின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவித்ததைத் தொடர்ந்து, வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, தனது உலகக்கிண்ணப் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 2026 ஜனவரி ஆரம்பத்தில் ஐசிசி-யைக் கோரியிருந்தது.

ஐசிசி இந்தக் கோரிக்கையை நிராகரித்ததையடுத்து, பங்களாதேஷ் இரண்டாவது கடிதத்தை அனுப்பியதுடன், தமது அணி இந்தியாவில் விளையாடாது என்பதை மீண்டும் வலியுறுத்தியது.
இந்த முடிவை உறுதிப்படுத்திய பங்களாதேஷ் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், அரசாங்கம் வீரர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிப்பதாக விளக்கமளித்தார். "இந்தியாவில் பாதுகாப்பு நிலவரம் மாறவில்லை. ஒரு உண்மையான சம்பவத்தின் அடிப்படையிலேயே எமது அச்சம் எழுந்தது.
இந்திய கிரிக்கெட் சபையால் அழுத்தங்களுக்கு மத்தியில் எமது ஒரு கிரிக்கெட் வீரருக்குப் போதுமான பாதுகாப்பை வழங்க முடியவில்லை, என்று அவர் கூறினார். இந்தக் கருத்தை ஆமோதித்த BCB தலைவர் அமினுல் இஸ்லாம், "இலங்கையில் விளையாடுவதற்கான எமது திட்டத்துடன் மீண்டும் ஐசிசி-யை அணுகுவோம்.

அவர்கள் எமக்கு 24 மணிநேர காலக்கெடு விதித்தனர், ஆனால் இந்தியாவுக்குச் செல்வதில்லை என்ற முடிவு அரசாங்க மட்டத்தில் எடுக்கப்பட்டது, என்று கூறினார். வீரர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும், இறுதி முடிவு சபை மற்றும் அரசாங்கத்திடமே தங்கியிருந்தது.
பங்களாதேஷ் தனது 'சி' பிரிவின் முதல் மூன்று போட்டிகளை கொல்கத்தாவில் மேற்கிந்திய தீவுகள் (பெப்ரவரி 7), இத்தாலி (பெப்ரவரி 9) மற்றும் இங்கிலாந்து (பெப்ரவரி 14) ஆகிய அணிகளுக்கு எதிராகவும், இறுதிப் போட்டியை மும்பையில் நேபாளத்திற்கு எதிராகவும் (பெப்ரவரி 17) விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படாததால், தொடரில் பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என்பதை ஐசிசி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. 2026 டி20 உலகக்கிண்ணத் தொடர் திட்டமிட்டபடி பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும்.