புதிய பாலம் தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி ரணில்!
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் இருக்கும் பழுதடைந்த பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணியை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணிலின் பணிப்புரைக்கு அமைய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னவுக்கு ஜனாதிபதியின் செயலார் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதிவரை ரயில் நிலையத்திற்கு பயணிகள் செல்வதற்கு வசதியாக 10 நாட்களுக்குள் தற்காலிக பிரவேச வீதி ஒன்றை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போதுள்ள மேம்பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டும் பணியை 5 மாதங்களுக்குள் முடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தேவையாக கருதி அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்திற்கு இது தொடர்பான பணியைக் கையளிக்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளதோடு அதற்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளது.
இதன் வடிவமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படவுள்ளது,
இந்த பணிகள் அனைத்தையும் இன்று முதல் ஆரம்பிக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.