தங்க நகைகள் பணத்துடன் வழியில் கிடந்த பை; ஆட்டோ ஓட்டுநர் செய்த செயல்
தங்க நகைகள் மற்றும் பணத்துடன் வழியில் கிடந்த பையை பொலிஸில் ஒப்படைத்து, அது உரியவர்களிடம் சென்றடைய நடவடிக்கை எடுத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
மடூல்சீமை றோபேரி தோட்டத்தில் வசிக்கும் சசிகலா என்ற பெண்ணின் தாயார், சுகயீனமுற்று பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த தனது தாயாரின் 2 பவுன் சங்கிலி, மோதிரம் ஒன்றும், ஒரு பவுன் மதிக்கத்தக்க தோடுகள் என்பவற்றுடன் 2,440 ரூபா பணம் என்பவற்றை தனது கைப்பையில் எடுத்துக் கொண்டு சசிகலா, பதுளையில் இருந்து பசறை வழியாக பிட்டமாறுவை பகுதிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார் .
தவறவிடப்பட்ட கைப்பை
இதன்போது அவரின் பை தவறிவிழுந்துள்ளது. இந்நிலையில் மாளிகாத்தன்னை பகுதி விகாரை இருந்து, தேரர் ஒருவரை ஏற்றிக் கொண்டு சென்ற தியாகராஜா என்ற ஆட்டோ ஓட்டுநர், மடூல்சீமை செல்லும் வீதியில் 6ஆம் கட்டைப் பகுதியில் குறித்த கைப்பையை வீதியில் கண்டெடுத்துள்ளார்.
இதனையடுத்து கைப்பையை அவர் பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த கைப்பையிலிருந்த தேசிய அடையாள அட்டையின் விலாசத்தை அவதானித்து, உடன் மடூல்சீமை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததன் பின்னர் உரியவரிடம் பொருட்களடங்கிய கைப்பை ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் தியாகராஜாவின் செயலுக்கு பல்லரும் பாராட்டியுள்ளனர்.