பதுளை- நானுஓயா ரயில் சேவை ; நேரஅட்டவணை வௌியீடு
'டித்வா' சூறாவளியால் தடைபட்டிருந்த பதுளை மற்றும் நானுஓயா இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி நிலைமையின் போது, நானுஓயா மற்றும் அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

'டித்வா' சூறாவளி நிலச்சரிவு
ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று (17) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தனியார் துறையுடன் இணைந்து, ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நானுஓயா மற்றும் அம்பேவெல இடையே நிலச்சரிவுக்குள்ளான ரயில் பாதையை வழமைக்குக் கொண்டுவந்துள்ளது.
இதற்கமைய, இதுவரையில் அம்பேவெல மற்றும் பதுளைக்கு இடையில் மாத்திரம் பயணித்த பயணிகள் ரயில் சேவைகள், இம்மாதம் 20ஆம் திகதி முதல் நானுஓயாவில் இருந்து இயக்கப்படும்.
அதேவேளை, கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கிரேட்வெஸ்டர்ன் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட ரயில் பாதையை வரைபடமாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.