பாடசாலை மாணவர்களின் தவறான பழக்கங்கள்; ஏற்பட்ட விளைவு
நாட்டின் பாடசாலை மாணவர்களில் 12 சதவீதமானோர் அதிக எடையுடனும், 3 சதவீதமானோர் உடல் பருமன் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களின் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

துரதிர்ஷ்டவசமான ஒரு நிலைமை
நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியும் குறைவடைந்துள்ள பின்னணியில், பாடசாலை மாணவர்கள் இவ்வாறான நோய் நிலைகளுக்கு ஆளாவது துரதிர்ஷ்டவசமான ஒரு நிலைமை என அந்த அமைச்சின் ஊட்டச்சத்து பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் மோனிகா விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
விசேட வைத்திய நிபுணர் மோனிகா விஜேரத்ன மேலும் கூறுகையில், 2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய அடிப்படையிலான பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்புத் தரவுகளை சேகரித்தபோது, 13 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளே இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அந்தப் பிள்ளைகளில் 12% பேர் அதிக எடையுடனும், 3% பேர் உடல் பருமன் நிலையினாலும் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிள்ளைகளின் உணவு முறை குறித்தும் இந்த ஆய்வில் ஆராயப்பட்டது.
பாடசாலை மாணவர்களில் 17.04% பேர் தினமும் கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிப்பதற்கு பழகியுள்ளனர். அதேநேரம் 28.05% பேர் அதிக உப்புள்ள உணவுகளையும், 29% பிள்ளைகள் அதிக எண்ணெய்த்தன்மை கொண்ட உணவுகளையும், 41% பிள்ளைகள் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளையும் தினமும் ஒரு முறையாவது அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் உட்கொள்வதற்கு பழகியுள்ளனர்.
தற்போதுள்ள தரவுகளின்படி, நமது மக்கள் தொகை வளர்ச்சி வேகம் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது. 1.9 ஆக இருந்த மக்கள் தொகை வளர்ச்சி வேகம் 1.3 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.