பெக்கோ சமன் விளக்கமறியலில் இருந்து விடுவிப்பு!
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” மனைவி ஷானிகா லக்ஷானி பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த' , 'பாணந்துறை நிலங்க' மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இ தையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணை மற்றும் 150,000 ரூபா பெறுமதியான ரொக்க பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம ஒக்டோபர் 31 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து “பெக்கோ சமனின்” மனைவி நேற்று வெள்ளிக்கிழமை (26) தனது பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.