உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிடாதிங்க ; இப்போவே நிறுத்திடுங்க
இன்றைய காலகட்டத்தில் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நோயின் தாக்கம் பெரும்பாலும் எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமல் அமைதியாகவே உயரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இத்தகைய தீவிர நோய் பாதிப்பை கட்டுக்குள் வைத்துக்கொள்ள, மருந்து / மாத்திரைகளுடன் சேர்த்து நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்களே போதுமானது. அந்த வகையில் சோடியம், சர்க்கரை, கெட்ட கொழுப்புச்சத்து, சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து போன்றவற்றை தவிர்த்து வந்தாலே ரத்த அழுத்த அளவு உயர்வதை நம்மால் தவிர்க்கவும் தடுக்கவும் முடியும். அப்படியான சில உணவுகள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.

என்னென்ன உணவுகள்
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்: இறைச்சியின் ஆயுட்காலத்தை நீட்டிக்க, அதில் சோடியம் மற்றும் நைட்ரேட்ஸ் அதிகம் சேர்க்கப்பட்டிருக்கும். சாதாரண இறைச்சியை விட பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் 400% வரை அதிக சோடியம் இருக்கலாம் என சில ஆய்வுகள் சொல்கின்றன.
ரத்தத்தில் சோடியம் அதிகரிக்கும்போது, உடல் நீரைத் தக்கவைத்துக்கொள்கிறது, இது ரத்த நாளங்களில் அழுத்தத்தை உயர்த்தி ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். மேலும் இதில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம். எனவே இவற்றை தவிர்த்துவிடுங்கள்

பேக்கரி பொருட்கள்: பிரெட் நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்கு அதிக அளவு உப்பு சேர்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பல துண்டு பிரெட் சாப்பிடும்போது ரத்த அழுத்தம் உயரும். மட்டுமன்றி பெரும்பாலான பேக்கரி பொருட்கள் மைதாவால் செய்யப்படுகின்றன. இதில் நார்ச்சத்து மிகவும் குறைவு. எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக உயர்வதோடு, இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
சர்க்கரை பானங்கள்: சோடா, குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் போன்றவற்றில் ஃப்ரக்டோஸ் அதிக அளவு சேர்க்கப்படும். இவை உடல் அழற்சி, யூரிக் அமில அளவில் உயர்வு, இன்சுலின் உற்பத்தியில் உயர்வு போன்ற மாற்றங்களை உடலில் ஏற்படுத்தி ரத்த நாளங்களை அதிக அளவில் பாதிக்கும். எனவே ரத்த அழுத்த நோயாளிகள் இவற்றை தவிர்த்துவிடுவது நல்லது.
பேக் செய்யப்பட்ட உணவுகள்: சூப், காய்கறிகள், பழங்கள் தொடங்கி பீட்சா வரை என எந்தவொரு பேக் செய்யப்பட்ட உணவாக இருந்தாலும், அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க சோடியம் (உப்பு) அதிக அளவில் சேர்க்கப்பட்டிருக்கும். ஃபரக்டோஸ், பாமாயில் போன்றவையும் இவற்றில் அதிகம்.

காஃபின் (Caffeine): காஃபி, டீ மற்றும் எனர்ஜி டிரிங்க்ஸ் போன்றவற்றை அதிக அளவில் குடிப்பது ரத்த அழுத்தத்தை தற்காலிகமாக உயர்த்தும். குறிப்பாக இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். எனவே அவற்றை தவிர்த்துவிடுவது நல்லது.
மது அருந்துவது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, ரத்த அழுத்தத்திற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் செயல்திறனையும் குறைக்கும்.
எனவே இவற்றை கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும். இத்துடன் நீண்ட கால ரத்த அழுத்த கட்டுப்பாட்டிற்கு தினமும் 30 முதல் 40 நிமிட நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி, யோகா, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை அவசியம்.