அவிசாவளை வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
அவிசாவளை - மாதொல பகுதியில் பழைய இரும்புகளை சேகரிக்கும் மத்திய நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்பில் மஸ்கெலியாவைச் சேர்ந்த 49 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவம் இன்றைய தினம் (06-02-2024) பிற்பகல் மாதொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த அந்த நபர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றுமொரு நபருடன் இணைந்து பழைய இரும்புகளை சேகரித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணமடைந்தவரின் சடலம், அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் ஸ்தலத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.